அடுக்குமாடி குடியிருப்பில் கொழுந்து விட்டெரிந்த தீ.. 7வது மாடியில் இருந்து குதித்த தம்பதிக்கு நேர்ந்த சோகம்!
பிரேசலில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதால், தீயிலிருந்து தப்ப 2 மாத குழந்தையுடன் 7வது மாடியிலிருந்து குதித்த தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 7வது மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டில் லூயிஸ் எவால்டோ லிமா (28) - கிரேசியன் ரோசா டி ஒலிவேரா (35) என்ற தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று, தம்பதியர் வசித்து வந்த குடியிருப்பில் தீப்பற்றியுள்ளது. தீயின் உக்கிரம் அதிகரிக்கவே, ஜன்னல் வழியாக கீழே குதிக்க அந்த தம்பதியர் முடிவு செய்துள்ளார்கள். கீழே நின்றவர்கள் குதிக்க வேண்டாம் என சத்தமிட, அதற்குள் தீ வேகமாக பரவ, தங்கள் 2 மாதக் குழந்தை லியோ ஒலிவேரா டி லிமாவை கட்டியணைத்தபடி அந்த தம்பதியர் கீழே குதித்துள்ளார்கள்.
ஏழாவது மாடிலியிலிருந்து கீழே விழுந்த வேகத்தில் மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். தம்பதியரின் மூத்த குழந்தை, 7 வயது மகள், அவர்களுடைய வீடு தீப்பற்றியபோது பள்ளிக்குச் சென்றிருந்ததால் உயிர் பிழைத்துள்ளாள்.
அந்தச் சிறுமி தற்போது தன் தாத்தா பாட்டி வீட்டில் இருக்கிறாள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், போலீசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.