அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட போலீசார்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

 
Ohio

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணை போலீசார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் வெஸ்டர்வில்லில் உள்ள க்ரோகர் வணிக வளாகத்தில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட தாகியா யங் என்ற கர்ப்பிணி பெண் போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது பிளெண்டன் டவுன்ஷிப் போலீஸ் அதிகாரிகள் காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து இருந்த கர்ப்பிணியான தாகியா யங்கை நெருங்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

Ohio

அதில், தாகியா யங் நோக்கி போலீசார், “நீங்கள் வணிக வளாகத்தில் இருந்து பீர் பாட்டிலை திருடியதை ஊழியர்கள் கண்டுபிடித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர், எனவே உடனடியாக காரில் இருந்து வெளியேறுங்கள்” என அறிவுறுத்துகின்றனர். அதற்கு, “தான் எதையும் திருடவில்லை என்று பதிலளித்து காரின் பக்கவாட்டு கண்ணாடியை லேசாக திறந்து வைத்து கொண்டு போலீசாருடன் தாகியா யங் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

ஒரு கட்டத்தில் காரை முன் செலுத்த தாகியா யங் முயற்சித்துள்ளார். அப்போது காரின் முன் பக்கத்தில் நின்ற மற்றொரு போலீஸ் அதிகாரி காரின் முன் கண்ணாடியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தாகியா யங் காயமடையே கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கட்டிடத்தின் சுவரில் இடித்து நின்றது. உடனடியாக அவசர உதவிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு விடுத்து, சம்பவ இடத்தில் இருந்து காயமடைந்த தாகியா யங்கை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் எதிர்பாராத விதமாக தாகியா யங் மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்நிலையில் போலீசாரின் இந்த கடுமையான நடவடிக்கையை குற்றச்செயல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் என்று தாகியா யங் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

From around the web