பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை!
பிரான்சின் நியூ கலிடோனியாவில் உள்ள லாயல்டி தீவுகளுக்கு தென்கிழக்கே 7.7 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பசிபிக் பெருங்கடலின் ஓர் அங்கமாக நியூ கலிடோனியா தீவுகள் உள்ளன. இது மூன்று நிர்வாக பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நேற்று நியூ கலிடோனியா தீவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து நியூ கலிடோனியாவில் பிஜூ, வானட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
தெற்கு பசிபிக் பகுதியில் 26 இடங்களில் கடல் மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும் சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுனாமி அச்சுறுத்தல் பெரும்பாலும் கடந்துவிட்டதாகக் கூறியுள்ளது.
வனுவாட்டு வானிலை ஆய்வு மற்றும் புவி-அபாயங்கள் துறையின் இணையதளத்தின்படி, மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லும்படி கேட்டுக்கொண்ட எச்சரிக்கையை அந்நாட்டு அரசு திரும்பப் பெற்றுள்ளது. மேலும், அழிவுகரமான சுனாமியை இனி ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
நிலநடுக்கத்திற்குப் பிறகு, ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் அதன் கிழக்கு கடற்கரையில் உள்ள லார்ட் ஹோவ் தீவுக்கு சுனாமி அச்சுறுத்தலை வெளியிட்டது. மேலும், உயரமான அலைகள் மற்றும் வலுவான நீரோட்டங்கள் காரணமாக கடலோரத்தில் உள்ள மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்தது. இது தற்போது கடல்சார் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது.