ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு... 12 பேர் உயிரிழப்பு! அதிர்ச்சி வீடியோ

 
Ecuador

ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. 

துருக்கி நாட்டில் கடந்த மாதம் 6-ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான சிரியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்த வண்ணம் உள்ளன. இந்தியாவிலும் அசாம், அந்தமான் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்புகள் அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Ecuador

பெரு மற்றும் ஈக்வடாரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தார். இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள பல கட்டிடங்கள் சேதமடைந்தன என்று ஈக்வடார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈக்வடாரில் உள்ள மச்சலா மற்றும் குயென்கா போன்ற நகரங்களில் இந்த நிலநடுக்கம் காரணமாகச் சேதம் அதிகமாக உள்ளது. அங்குப் பல கட்டிடங்கள் அப்படியே சரிந்துள்ளன. மேலும், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நொறுங்கின.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி 12.12 மணிக்கு 66 கிலோமீட்டர் ஆழத்தில் பெருவின் எல்லைக்கு அருகில் உள்ள ஈக்வடார் பாலாவோவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாகப் பொதுமக்கள் அஞ்சிய நிலையில், அனைவரும் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் முகாமிட்டுள்ளனர்.


இதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக 12 உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. எல் ஓரோ மாகாணத்தில் 11 பேரின் சடலங்களும், அசுவே மாகாணத்தில் ஒருவரின் சடலமும் கண்டறியப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. குவாயாகில், குய்டோ, மனாபி மற்றும் மந்தா உள்ளிட்ட இடங்களிலும் இந்த நடுக்கம் வலுவாக உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்று வலியுறுத்தியுள்ள ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ, சேதம் ஏற்படுவது குறித்து தகவல்களைப் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் பரவும் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

From around the web