360 வயதில் ஓய்வூதியம் பெறும் நபர்.. சிஸ்டம் கெட்டுப்போச்சு! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!!

அமெரிக்காவில் ஒவ்வொருத்தரும் சம்பளத்தின் ஒரு பகுதியை அரசின் ஓய்வூதியத்திட்டத்திற்கு செலுத்தி வருகின்றனர். ஆண்டு தோறும் இந்தத் தொகை அதிகரிக்கப்பட்டு வரும். 63 வயது நிரம்பிய பிறகு அரசிடமிருந்து மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளலாம். ஓய்வூதியத் தொகை, குறிப்பிட்ட நபரின் வருமானம், செலுத்திய தொகை, பணியில் இருந்த ஆண்டுகள் அடிப்படையில் மாறுபடும். 67 வயதுக்குப் பிறகு பெற்றுக் கொண்டால், கு சற்று கூடுதல் ஓய்வூதியமும் 70 வயதுக்குப் பிறகு பெற்றுக்கொள்பவர்களுக்கு அதிகபட்ச ஓய்வூதியமும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் வழங்கப்படும்.
இந்த ஓய்வூதியத்திற்காக அமெரிக்க அரசின் வருமானத்தின் பெரும் தொகை செலவிடப்படுகிறது. இந்த துறை திறம்பட செயல்படவில்லை, இறந்து போனவர்கள் பெயரில் எல்லாம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்று அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் அந்த துறை அதிகாரிகள் இதை மறுத்ததுடன், தகவல் பிழையினால் அப்படி சில பேர்களின் பெயர் பட்டியலில் இருக்கலாம். ஆனால் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று கூறினார்கள்.
இன்று அமெரிக்கப் பாராளுமன்றத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், ஓய்வூதியத் துறை சீர்கெட்டுப் போயுள்ளது. இறந்து போனவர்களுக்கு எல்லாம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அது எங்கே யாருக்குச் செல்கிறது என்று தெரியவில்லை. அந்த துறையின் தகவல் படி 200 முதல் 209 வயது நிரம்பிய 879 பேருக்கும், 210 முதல் 229 வயது நிரம்பிய 1039 பேருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 240 முதல் 249 வயது வரம்பில் ஒருத்தர் இருக்கிறார்.அவரைப் பார்த்தால் நான் கையெடுத்து வணங்குவேன், வாழ்த்துவேன் அவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மேலும் 360 வயது கொண்ட ஒருத்தர், அமெரிக்காவின் வயதை விட மூத்தவர் ஒருத்தருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
அதிபர் ட்ரம்பின் இந்த பேச்சின் போது எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் “பொய்” என்ற முழக்கத்துடன் கூடிய பதாகையைக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். ஓய்வூதியத் துறையிலும் அதிபர் ட்ரம்ப் ஆட்குறைப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.