அமெரிக்காவில் பேரறிஞர் அண்ணா பெயரில் புதிய தமிழ்த் துறை! கலிஃபோர்னியா பெர்க்கிளி பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!!

 
Arignar Anna

அமெரிக்காவின் பிரபல பெர்க்கிளி பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் தமிழ் இருக்கையில், பேரறிஞர் அண்ணா பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை டாக்டர்.ஜானகிராமன் தெரிவித்துள்ளார்.

சமூகத் தொண்டாற்றிய வாழ்நாள் சாதனையைப் பாராட்டி அமெரிக்க அதிபர் விருது மூன்று முன்னோடித் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. ஹார்வர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ்ச் சமுதாயப் பணிகளுக்காக டாக்டர்.சம்மந்தம், டாக்டர். ஜானகிராமன் மற்றும் புரவலர் பால்பாண்டியன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் மார்க் வீஸி கலந்து கொண்டு இந்த விருதுகளை வழங்கினார்.

Janakiraman Mark

விருது பெற்றுக் கொண்ட டாக்டர் ஜானகிராமன் ஏற்புரை ஆற்றிய போது, “ ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காகத் தொடங்கப்பட்ட Tamil Chair Inc என்ற தன்னார்வ நிறுவனம் தொடர்ந்து தமிழ்ப் பணிகளை செய்து வருகிறது. ஹார்வர்ட் தமிழ் இருக்கையைத் தொடர்ந்து கனடாவில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டது ஜெர்மனியின் கொலொன் பல்கலைக்கழகத்தில் மூடப்படவிருந்த தமிழ்த் துறையை தொடர்ந்து செயலாற்றுவதற்கு நிதியுதவி செய்து வழி வகை செய்தோம். கலிஃபோர்னியாவில் உள்ள  பிரபல பெர்க்களி பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே தமிழ் இருக்கை செயல்பட்டு வருகிறது. ஆனால் நிதிப்பற்றாக்குறைக் காரணமாக ஒரு தமிழ்ப் பேராசிரியருக்கான இடத்தை நிறுத்துவதற்கு முடிவு செய்திருந்தார்கள். அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி 1 மில்லியன் டாலர்கள் நன்கொடை தருவதாக உறுதி அளித்தோம். 

Anna Tamil Endowment

அதே வேளையில் இந்தத் துறை பேரறிஞர் அண்ணாவின் பெயரில் இயங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தோம். அதைத் தொடர்ந்து Arignar Anna Endowment for Tamil Studies at UC Berkeley என்ற பெயரில் தற்போது அங்கே இயங்கி வருகிறது, இது அரசியல் காரணங்களுக்கானது அல்ல. மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா. அவர் பெயரில் ஒரு சிறந்த பல்கலைக்கழகத்தில் துறை இருப்பது தான் மேன்மையானது ” என்று தெரிவித்தார். 

ஹார்வர்ட் தமிழ் இருக்கையைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் பெயரிலும் அமெரிக்க பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை இயங்கி வருவது தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.

From around the web