ஹமாஸ் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்.. போர் பதற்றம்.. 22 பேர் பலி, 500 பேர் படுகாயம்!
இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பு நடத்திய கண்மூடித்தனமான தாக்குதால் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அப்பகுதியில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. மேலும், இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.
இதையடுத்து ‘ஆபரேஷன் அயர்ன் ஸ்வார்ட்’ என்ற பெயரில் காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருக்கும் இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும் 35 இஸ்ரேலிய ராணுவ வீரர்களை கைப்பற்றியதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளது.
போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமூக வலைதளத்தில் “நாம் போரில் இருக்கிறோம், வெல்லுவோம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.