டென்னஸ்ஸி மாகாணத்தை புரட்டிப்போட்ட சூறாவளி.. 6 பேர் பலி!

 
tennessee

அமெரிக்காவில் சூறாவளி புயலால் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்னஸ்ஸி மாகாணத்தின் கல்லாட்டின் மற்றும் ஹெண்டர்சன்வில்லே, வடகிழக்கு நாஷ்வில்லே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது.  இதனை தொடர்ந்து, கனமழை மற்றும் இடி, மின்னலும் சேர்ந்து தாக்கியது. இதில் சிக்கி, 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.  23 பேர் காயமடைந்தனர்.  

tennessee

இவற்றில் வடகிழக்கு நாஷ்வில்லே பகுதியில் புறநகர் பகுதியான மேடிசன் நகரில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர் என அவசரகால மேலாண் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இதேபோன்று மான்ட்கோமெரி கவுன்டி பகுதியில், கிளார்க்ஸ்வில்லே என்ற இடத்தில் இன்று மதியம் சூறாவளி புயல் தாக்கியதில் 2 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர்.  

காயமடைந்த 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியானது துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. சூறாவளி புயலை அடுத்து, கிளார்க்ஸ்வில்லே பகுதியில் அவசரநிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், இரவு 9 மணிக்கு பின்பு இன்று ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என சி.என்.என். வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.


டென்னஸ்ஸி மாகாணத்தில் சூறாவளி தாக்குதலால் ஆயிரக்கணக்கானோருக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. பல வீடுகளும் சேதமடைந்து உள்ளன. மரங்கள் வேருடன் சாய்ந்து வீழ்ந்தன. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின்சார வசதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

From around the web