உருவகேலி செய்த நண்பன்.. ஆத்திரத்தில் சுட்டுக்கொன்ற மாணவன்.. அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவில் உருவக் கேலி செய்ததற்காக நண்பர்கள் மீது மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாகாணமான அயோவாவில் நேற்று காலை மாணவர்கள் வழக்கம்போல் பாடங்களை பயின்று கொண்டிருந்தனர். அப்போது பள்ளியில் பயின்று வந்த மாணவர் ஒருவர் திடீரென தன் கையில் இருந்த துப்பாக்கி மற்றும் ஷாட்கன் மூலமாக அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார்.
இதில் ஒரு மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த மாணவரும் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உயிரிழந்த மாணவரின் பெயர் டைலன் பட்லர் (17) என்பதும், அவர் அதே பள்ளியில் பயின்று வந்ததும் தெரியவந்தது. அவரது நண்பர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாகவே அவரது உருவத்தை வைத்து நண்பர்கள் கேலி செய்து வந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த டைலன் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையே அவரது உடலின் அருகே வெடிபொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், அவர் மேலும் பலரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கி சூட்டிற்கு முன்னதாக டைலன் பள்ளியில் உள்ள கழிவறையில் இருந்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், “உன் கெட்ட கனவு நிஜமாக போகிறது. நான் தான் உனது மோசமான எதிரி” என்பது போன்ற பாடல் வரிகள் அடங்கிய ஜெர்மன் மொழி பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் தொடர்ந்து தங்களைக் கேலியும், கிண்டலும் செய்து வந்ததால், டைலன் இது போன்ற ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் என அவரது சகோதரி காம்யா ஹால் தெரிவித்துள்ளார்.