தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்த வழக்கு.. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது..!!

 
Trump

தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதனால் 4 ஆண்டுகள் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தார். அங்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலிலும் குடியரசு கட்சி சார்பில் இவர்தான் முன்னிலை வகிக்கிறார்.

ஆனால் டிரம்ப் மீது தனக்கு எதிராக பாலியல் புகார் அளித்த பெண்களுக்கு குற்றத்தை மறைப்பதற்காக பணம் வழங்குதல், வெள்ளை மாளிகையில் இருந்து ரகசிய ஆவணங்களை கடத்தி சென்றது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. ஜார்ஜியா மாகாணத்தில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தல் மோசடி அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அந்த தேர்தலில் அவர் தற்போதைய அதிபர் ஜோ பைடனுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

Trump

அந்த சமயத்தில் ஜோ பைடனுக்கு எதிரான வாக்குகளை கண்டறியும்படி உயர்மட்ட தேர்தல் அதிகாரி ஒருவருடன் டிரம்ப் போனில் பேசுவது போன்ற ஆடியோ அங்குள்ள சமூக வலைதளங்களில் வெளியானது. ஆனால் இந்த வழக்குகள் தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட சதி என கூறி வரும் டிரம்ப் தன்மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.

எனினும் தேர்தல் முடிவுகளை மாற்ற முயன்றதாக டிரம்ப் மற்றும் அவருக்கு உதவி செய்த 18 பேர் மீது தேர்தல் மோசடி வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை அங்குள்ள ஜார்ஜியா மாகாண நீதமன்றத்தில் நடந்து வருகிறது.

குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த கோர்ட்டு முடிவு செய்தது. எனவே டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அதேசமயம் வருகிற 25-ந் தேதிக்குள் (இன்று) தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

Trump

இந்த நிலையில், ஜார்ஜியா தேர்தல் வழக்கு தொடர்பாக அமெரிக்க நேரப்படி 24-ம் தேதி இரவு 7 மணியளவில் அட்லாண்டா சிறையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சரணடைந்தார். பலத்த பாதுகாப்புடன் சிறையில் சரணடைந்த நிலையில், சிறை அதிகாரிகள் அவரது அடையாளங்களை குறித்தனர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் பரபரப்பாக காணப்பட்டது. அதன்பின் 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையாக செலுத்திய பின், விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டதும், உடனடியாக விமானம் மூலம் நியூஜெர்சி புறப்பட்டார்.

இந்த வழக்கில் 25-ம் தேதிக்குள் டிரம்ப் சரணடைய வாய்ப்புள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். அதேவேளையில், நான் சரணடையப் போகிறேன் என்று டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web