1 வயது குழந்தையை சுட்டுக்கொன்ற 3 வயது குழந்தை.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!
அமெரிக்காவில் ஒரு வயதான தனது சகோதரியை தவறுதலாக 3 வயது குழந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்களை துப்பாக்கி சூட்டுக்கு பறிகொடுத்து வரும் வல்லரசு நாடான அமெரிக்கா, துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அந்த அளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு, ஒரு மிக பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளைக்கு சராசரியாக 53 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில், அமெரிக்கவின் கலிபோர்னியா மாகானத்தின் சான் டியாகோ கவுண்டியில் உள்ள பால்புரூக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு 3 வயது குழந்தை ஒன்று வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது தவறுதலாக வீட்டிலிருந்த ஒரு வயது சகோதரியின் தலைப்பகுதியில் சுட்டு கொன்றுள்ளது.
நடந்த இச்சம்பவம் குறித்து அமெரிக்க போலீசார் கூறுகையில், “காவல் நிலையத்திற்கு குழந்தை போன் செய்து உள்ளது. அழைப்பிற்கு பதிலளித்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 3 வயது குழந்தை தவறுதலாக 1 வயது சகோதரியின் தலையில் சுட்டுள்ளது தெரியவந்தது.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் சுயநினைவின்றி இருந்த குழந்தையை மீட்டு பலோமர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் எற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்” என்று கூறி உள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை கண்டெடுத்து உள்ளனர். இச்சம்பவம் குறித்து குழந்தைகளின் நலன்கருதி பெயர் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.