ஈஸ்டர் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலி; 31 பேர் காயம்!!

 
USA-Easter-celebration-shooting-2-killed-31-people-injured

அமெரிக்காவில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 இளைஞர்கள் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த வாரம் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டின. இந்த நிலையில், தெற்கு கரோலினா மாகாணத்தில் கொலம்பியா நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மக்கள் அதிகம் கூடியிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது.  துப்பாக்கி சூடு நடப்பது தெரிந்ததும் மக்கள் நாலாபுறமும் அலறியடித்து கொண்டு ஓடினர்.  இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் காயம் அடைந்தனர்.  மொத்தம் 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்கள் அனைவரும் 15 முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில் ஜுவெய்னே எம். பிரைஸ் என்ற 22 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நேற்றைய ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்களில் தெற்கு கரோலினா மற்றும் பிட்ஸ்பர்க்கில் இரு வேறு துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.

இதில், தெற்கு கரோலினாவில் ஹேம்ப்டன் கவுன்டி பகுதியில் சார்ல்ஸ்டன் நகரில் இருந்து 80 மைல்கள் தொலைவில் நைட் கிளப் ஒன்றில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், 9 பேர் காயமடைந்தனர். எனினும், இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.

இதேபோன்று, பிட்ஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்து உள்ளனர். 8 பேர் காயமடைந்தனர். இதனால், ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தில், துப்பாக்கி சூட்டில் மொத்தம் 31 பேர் காயமடைந்து உள்ளனர்.

அமெரிக்காவில் சமீப நாட்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. கடந்த வாரம், நியூயார்க் சுரங்கப்பாதையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். அதற்கு அடுத்த நாள் சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த மாத தொடக்கத்தில், கலிபோர்னியாவின் சேக்ரமெண்டோ பகுதியில், பரபரப்பு நிறைந்த இடத்தில், எதிர் கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

அயோவாவில் நைட் கிளப் ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன், நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். கடந்த மாதம், டல்லாஸில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் சுடப்பட்டனர்.  

இதனை தொடர்ந்து, சம்பவ பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற பலர் காயமடைந்தனர். இந்நிலையில், கடந்த வார ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்ட நிறைவில் 2 இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன், 31 பேர் காயமடைந்து உள்ளனர்.

From around the web