அமெரிக்காவில் தொடரும் உயிர் பலிகள்... துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி!

அமெரிக்காவில் சீன புத்தாண்டு நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்ட 48 மணி நேரத்திற்குள் இரு நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல் நகரில் சீன புத்தாண்டு நடன நிகழ்வில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்ட 48 மணி நேரத்திற்குள் வடக்கு கலிபோர்னியா மற்றும் அயோவாவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. 72 வயதான ஹூ கேன் டிரான் என அடையாளம் காணப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர், காவல்துறையினரால் சூழப்பட்டபோது தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.
வடக்கு கலிபோர்னியாவின் ஹாஃப் மூன் பே, சான் பிரான்சிஸ்கோவின் தெற்கே உள்ள பண்ணைகளில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். 67 வயதான சுன்லி ஜாவோ என்ற உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சனிக்கிழமையன்று துப்பாக்கிச் சூடு நடந்த மான்டேரி பூங்காவில் இருந்த கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம், புதிய சம்பவங்கள் பற்றிய செய்தி வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு பாரிய துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுடன் மருத்துவமனை சந்திப்பில், மற்றொரு துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விவரிப்பதற்காக நான் இழுத்துச் செல்லப்பட்டபோது. இந்த முறை ஹாஃப் மூன் பேயில். சோகத்தின் மீது சோகம்.” என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல், அயோவா மாகாணத்தில் உள்ள டெஸ் மொயின்ஸ் நகரில் மற்றொரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் இருக்கும் இளைஞர்களுக்கான கல்வி வழிகாட்டல் திட்டத்தை நடத்தும் ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமானது.
18 மற்றும் 16 வயதுடைய இரு இளைஞர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக டெஸ் மொயின்ஸ் போலீசார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். 49 வயதான வில்லியம் ஹோம்ஸ், ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் நிறுவனத்தின் நிறுவனர் சிஇஓ, ஆபத்தான நிலையில் உள்ளார்.