சக்திவாய்ந்த நிலநடுக்கம்... குலுங்கிய இந்தோனேசியா.!! 46 பேர் பலி, 700க்கும் மேற்பட்டோர் படுகாயம்

 
Indonesia

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 700 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. எனவே, இங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படும். உலகில் வேறு எந்த பகுதிகளைக் காட்டிலும் இந்த ரிங் ஆப் ஃபயர் பகுதியில் தான் அதிகப்படியான நிலநடுக்கம் ஏற்படும். இந்நிலையில், தற்போது அங்கு மோசமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகி உள்ளது. நில நடுக்கம் ஏற்பட்டபோது, மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். பலர் திறந்தவெளிகளுக்கும், மைதானங்களுக்கும் பதற்றத்துடன், அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

Indonesia

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 46 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பெங்குலு என்ற பகுதியில் இருந்து தென்மேற்கே 202 கிலோமீட்டர் தொலைவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 

அதைத் தொடர்ந்து மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகி உள்ளது. மேற்கு ஜாவாவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும் இது உணரப்பட்டது. இருப்பினும், ஜகார்த்தாவில் உயிரிழப்போ காயமோ எதுவும் பதிவாகவில்லை.


இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “மருத்துவமனையில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல 300 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி எலும்பு முறிவுகளால் காயமடைந்தவர்கள். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தோரை மீட்டு அவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.

மீட்பு பணிகள் இப்போது தான் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஒரே ஒரு மருத்துவமனையில் ஏற்பட்டவை. மற்றவை அருகே இருக்கும் கிராமங்களில் ஏற்பட்டவையாகும். இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும் நல்வாய்ப்பாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

From around the web