அலறியடித்து ஓடிய மக்கள்! இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி பலி!

தாய்லாந்தில் உள்ள இரவு விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கின் தென்கிழக்கில் சோனுபாரி மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் மவுண்டன் பீ பப் என்ற இரவு நேர விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த இரவு விடுதி அதன் வண்ணமயமான இரவுகளுக்கு பிரபலமானது. ஏராளமான இந்திய சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், இந்த விடுதியில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் கர்னல் வுடிபோங் சோம்ஜாய் கூறுகையில், நேற்று இரவு 1 மணியளவில் மவுண்டன் பீ பப் இரவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் அனைவரும் தாய்லாந்து குடிமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 9 ஆண்களும் 4 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து எற்பட்ட காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. அதில், பலர் தங்கள் உடல்களில் தீக்காயங்களுடன் பப்பில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடும் காட்சிகள் உள்ளன. தீ விபத்துக்கான காரணம் சரியாக தெரியவில்லை.இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.