திடீரென 1,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்! கலக்கத்தில் ஊழியர்கள்!!

 
Microsoft

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றி வந்த 1,800 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருப்பது ஊழியர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் பணவீக்கம் என்ற மாய அரக்கன் அனைத்தையும் அசைத்து கொண்டிருக்கிறான். சிறு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அண்மையில் பல்வேறு நிறுவனங்கள் செலவுகளை குறைப்பதற்காக ஊழியர்களை வெளியேற்றி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது மைக்ரோசாப்ட், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களும் இணைந்துள்ளன.

Fired

மைக்ரோசாப்ட் அதன் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக பல்வேறு பிராந்தியங்களில் பணியாற்றி வந்த 1,800 பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது. ஜூன் 30 அன்று அதன் நிதியாண்டு முடிவடைந்த பிறகு வணிகக் குழுக்கள் மற்றும் மறுசீரமைத்தல் காரணமாக சில பணியாளர்களை குறைத்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து புதியதாக பணியாளர்களை பணியமர்த்துவோம் என்றும் நடப்பு நிதியாண்டில் அதிகமாக பணியாளர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

“தற்போது சிறிய எண்ணிக்கையிலான பணி நீக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். எல்லா நிறுவனங்களையும் போலவே, நாங்கள் எங்கள் வணிக முன்னுரிமைகளை வழக்கமான அடிப்படையில் மதிப்பீடு செய்து, அதற்கேற்ப சில கட்டமைப்பு மாற்றங்களைச் செய்கிறோம். நடைபெற்ற மொத்த பணிநீக்கங்கள் 1.8 லட்சம் கொண்ட மைக்ரோசாப்டின் மொத்த பணியாளர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன” என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

google

சமீபத்தில் கூகுள் நிறுவனமும் 2022-ம் ஆண்டு புதிய பணியமர்த்தும் செயலை குறைக்கப்போவதாக அறிவித்தது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதே நேரத்தில் மார்க்கெட்டிங் வணிகம் மற்றும் நிறுவனத்தின் முக்கிய லாபம் ஈட்டும் துறைகளுக்காக அந்த நிறுவனம் ஆயிரக்கணக்கான புதிய ஊழியர்களை சேர்த்துள்ளது. மேலும் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் பிற முக்கியப் பணிகளில் ஆட்களை பணியமர்த்துவதில் கூகுள் நிறுவனம் கவனம் செலுத்தும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

From around the web