ஆஸ்திரேலியாவில் நேருக்கு நேராக மோதிக்கொண்ட ஹெலிகாப்டர்கள்.. 4 பேர் பலி!!

 
Helicopter

ஆஸ்திரேலியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாகணத்தின் கோல்ட் கோஸ்ட் கடற்கரையானது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும், இங்கு ஜனவரியில் சுற்றுலா கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் பொதுமக்கள் இன்று ஜாலியாக விடுமுறையை கழித்துக்கொண்டிருந்தனர்.

Helicopter

அப்போது வானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்தில் நொறுங்கிய ஒரு ஹெலிகாப்டர் கடற்கரையில் இருந்து சில அடி தூரத்தில் மணல் பரப்பில் விழுந்தது. அந்த விமானத்தில் பயணித்தவர்கள் காயமடைந்தனர். மற்றொரு ஹெலிகாப்டர் விபத்தை சமாளித்து கடற்கரைக்கு அருகேயுள்ள ஒரு இடத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன் முன் பகுதி மட்டும் சேதமடைந்தது.

அந்நாட்டு நேரப்படி மதியம் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற மீட்பு ஹெலிகாப்டர், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியது. மேலும், உடனடியாக அங்கு மீட்பு வாகனங்களும், காவல் துறையினரும் வருகை தந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


இந்த கோர விபத்தில் ஒரு ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் நடுவானில் எப்படி மோதிக்கொண்டன என்பது தொடர்பாக ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளது.

From around the web