டான்சில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட முன்னாள் பிரேசில் அழகி மரணம்

மிஸ் பிரேசில் பட்டம் வென்ற க்ளேசி கொரியா, டான்சில அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல் உபாதைகளின் விளைவாக உயிரிழந்தார். அவருக்கு வயது 27. 2018-ம் ஆண்டில் மிஸ் யுனைடெட் கான்டினென்ட்ஸ் பிரேசில் பட்டம் வென்ற க்ளேசி கொரியா, தென்கிழக்கு நகரமான மெகேயில் ஒப்பனை நிரந்தர ஒப்பனை நிபுணராகப் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் டான்சில் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட கொரியா, அடுத்த 5 நாட்களில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாக கோமா நிலையில் இருந்த க்ளேசி கொரியா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடும்ப போதகர் லிடியன் ஆல்வ்ஸ் கூறுகையில், “இவரது இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவர் ஒரு அற்புதமான பெண் மற்றும் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்டார். அவளுடைய புன்னகையும் புத்திசாலித்தனமும் இல்லாமல் வாழ்வது எளிதல்ல” என்று கூறினார்.