ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு! 4 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் பிரபல கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோதே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. நடப்பாண்டின் தொடக்கத்தில் ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் தலிபான்களுக்கு எதிரான அமைப்புகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போது ஷ்பகீசா டி20 கிரிக்கெட் லீக் எனும் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இது உள்ளூர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடராகும். இந்த தொடரின் ஒரு பகுதியாக நேற்று (ஜூலை 29) பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் மற்றும் பாமிர் சால்மி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின் போதுதான் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி இது தற்கொலைப் படை தாக்குதல் என சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் போட்டியை காண வந்திருந்த பார்வையாளர்களில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இதனை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி நஸீப் கான் அறிக்கையின் மூலம் உறுதி செய்துள்ளார்.
Bomb Blast in Kabul cricket stadium in Afghanistan. pic.twitter.com/Vu9kGzbUod
— Akash Kharade (@cricaakash) July 29, 2022
கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குண்டு வெடித்ததும் போட்டியை காண வந்திருந்த பார்வையாளர்கள் பெரும்பாலானவர்கள் பதட்டம் அடைந்து பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் காபூலில் மற்றொரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருந்தது.