#BREAKING இங்கிலாந்து மகாராணி எலிசபெத் காலமானார்! உலகத் தலைவர்கள் இரங்கல்

 
Queen-Elizabeth

இங்கிலாந்து மகாராணி எலிசபெத் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96.

எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற பெயர் கொண்ட இரண்டாம் எலிசபெத் 1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். தனது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி, மகாராணியாக முடிசூடிக் கொண்டபோது அவருக்கு வயது 25 தான். இங்கிலாந்து வரலாற்றில் இதற்கு முன்பு விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த நிலையில், அதனை கடந்து 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து இரண்டாம் எலிசபெத் வரலாற்று சாதனை புரிந்துள்ளார். 1952-ல் நிகழ்ந்த இவரது முடிசூட்டு விழா, உலகளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட முதல் பிரமாண்ட நிகழ்வு ஆகும்.

இவர் இங்கிலாந்து ராணி என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார். மேலும் 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன்வெல்த் எனப்படும் ஒரு காலத்தில் இங்கிலாந்தால் ஆளப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். இவை தவிர இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநரும் இவரே ஆவார்.

Elizabeth

இங்கிலாந்தில் மன்னராட்சி முடிவு பெற்று மக்களாட்சி நடைபெறும் போதிலும், இங்கிலாந்து பிரதமர்களை தேர்வு செய்வதில் ராணியின் பங்கு மிக முக்கியமானதாகும். இவர் இரண்டாம் உலகப் போரின் நாயகன் என்று போற்றப்படும் வின்ஸ்டன் சர்ச்சில் உள்பட 14 இங்கிலாந்து பிரதமர்களின் காலகட்டங்களில் அரசியாக பொறுப்பு வகித்துள்ளார்.

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் எப்போதுமே சூரியன் அஸ்தமிக்காது என்று வர்ணிக்கப்பட்ட கால கட்டத்தில் உலக நிலப்பரப்பில் 25 சதவீதத்தை மகாராணியாக ஆட்சி செய்த பெருமையும் இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. 1947-ல் இரண்டாம் எலிசபெத் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக 8 பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.

RIP

லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு தனது 99 வயதில் பிலிப் காலமானார். இதனிடையே, ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் ராணிக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாராணி எலிசபெத் இன்று உயிரிழந்தார். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web