இங்கிலாந்தில் 7 பச்சிளங் குழந்தைகள் கொலை.. இந்திய மருத்துவர் உதவியால் சிக்கிய கொடூர செவிலியர்!

 
UK

இங்கிலாந்தில் 7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற வழக்கில் செவிலியர் லூசி லெட்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு விசாரணையை தொடங்கினர்.

அப்போது அந்த மருத்துவமனையில் லூசி லெட்பி என்ற செவிலியர், சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெரிந்தது. இதுபோன்ற சம்பவங்களின் போது அந்த இடத்தில் லூசி லெட்பி இருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. விசாரணையின் போது குழந்தைகளின் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ குறிப்பேடுகள், லூசி லெட்பி வீட்டில் இருந்து சாட்சியங்களாக பறிமுதல் செய்யப்பட்டன.

UK

இதையடுத்து செவிலியர் லூசி லெட்பி 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நோய்வாய்ப்பட்ட அல்லது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு அதிக பால் ஊட்டியும், இன்சுலினுடன் விஷத்தை கொடுத்தும், குழந்தைகளுக்கு ரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் காற்றை செலுத்தியும், அதிகப்படியான பால் அல்லது திரவங்களை கட்டாயமாக கொடுத்தும் கொன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

7 குழந்தைகளை கொன்ற செவிலியர் லூசி லெட்பி சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் உதவி உள்ளார். பச்சிளங்குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த மருத்துவமனையில் குழந்தை நல மருத்துவராக ரவி ஜெயராம் என்பவர் பணியாற்றினார். இங்கிலாந்தில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் ரவி ஜெயராம், நர்சு லூசி லெட்பி மீது சந்தேகத்தை எழுப்பி எச்சரிக்கையை தெரிவித்தார். அதன்பின் மருத்துவமனை ஊழியர்கள் சிலரும் சந்தேகங்களை கூறினர். இதையடுத்து நர்சு லூசி லெட்பி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

UK

இதுகுறித்து டாக்டர் ரவி ஜெயராம் கூறுயதாவது, “2015-ம் ஆண்டு மூன்று குழந்தைகள் இறந்த பிறகு முதலில் கவலைகளை கூறினோம். மேலும் பல குழந்தைகள் இறந்ததால் செவிலியர் லூசி லெட்பி மீது சந்தேகம் ஏற்பட்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் தெரிவித்தோம். லூசி லெட்பி பற்றிய எச்சரிக்கைகளுக்கு காவல்துறை முன் கூட்டியே செவி சாய்த்து நடவடிக்கை எடுத்திருந்தால் சில உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இப்போது 4 அல்லது 5 குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருக்கக் கூடும்” என்றார்.

7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற வழக்கு மற்றும் 6 குழந்தைளை கொலை செய்ய முயன்றதாக தொடரபட்ட வழக்கில் செவிலியர் லெட்பி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அவரை குற்றவாளி என மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்ற நீதிபதி அறிவித்து அவருக்கான தண்டனை குறித்து திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.

From around the web