12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயதான மதபோதகர்.. கானாவில் பரபரப்பு
கானாவில் 63 வயது மதபோதகர் ஒருவர் 12 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் மத நம்பிக்கையில் ஊறிய ஒரு சமூகத்தில், வழக்கமான சடங்கு என்ற பெயரில் இந்த அவலம் அரங்கேறி இருக்கிறது. 63 வயது மதபோதகர் ஒருவர் 12 வயது சிறுமியை, திரளான விழா மற்றும் சடங்குகளின் மத்தியில் விமர்சையாக திருமணம் செய்திருக்கிறார். அந்த சிறுமிக்கு 6 வயது இருக்கும்போதே தனது மனைவியாக மதபோதகர் தேர்வு செய்துவிட்டதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை மேலும் கூட்டியுள்ளது.
குறிப்பிட்ட பிரிவின் மதவழிபாட்டுத் தலைவராக 63 வயதாகும் நுமோ போர்க்டே லாவ் ட்சூரு என்பவர் உள்ளார். இவர் 2 தினங்களுக்கு முன்னர் (மார்ச் 30) கானாவின் குரோவூரில் உள்ள நுங்குவாவில் நடைபெற்ற விழாவில் 12 வயதாகும் சிறுமியை தனது பக்தர்களின் ஆசியோடும், வாழ்த்துக்களோடும் பகிரங்கமாக திருமணம் செய்து உள்ளார். பாரம்பரிய திருமணத்தின் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான பிறகு, அது அவருக்கு பெரும் விமர்சனத்தை உண்டாக்கி உள்ளது.
திருமண விழாவின் புகைப்படங்கள் வெளியானதில் கானா நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மதபோதகரை விசாரிக்க வேண்டும் என்று பலர் கூறியுள்ளனர். கானா சட்டம் வழக்கமான திருமணங்களை அங்கீகரிக்கும், ஆனால் அதே வேளையில், கலாச்சார நடைமுறை என கூறி நடத்தப்படும் குழந்தை திருமணங்களை தடை செய்கிறது. கானாவில் திருமணத்திற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயது 18 ஆகும்.
A 63-year-old priest in Ghana has defended his marriage to a 12-year-old girl, who he selected as a bride when she was just six. They were wed in March, and local leaders have defended the wedding, insisted it was purely ceremonial, and that the marriage had not been consummated. pic.twitter.com/nh82k2LYVK
— RT (@RT_com) April 2, 2024
கானாவில் குழந்தை திருமண விகிதம் குறைந்து வருகிறது, ஆனால் இந்த நடைமுறை இன்னும் தொடர்கிறது என்று பிபிசி தெரிவித்துள்ளது. கானாவில் 19 சதவீதம் பெண்கள் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள், 5 சதவீதம் பேர் தங்கள் 15வது பிறந்தநாளுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று கேர்ள்ஸ் நாட் ப்ரைட்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.