சீனாவில் குழந்தைகள் பள்ளியில் கத்திக்குத்து.. 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி.. அதிர்ச்சி வீடியோ!

 
China

சீனாவில் பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் தென்கிழக்கே உள்ள குவாங்டாங் மாகாணத்தின் லியான்ஜியாங் நகரில் கிண்டர்கார்டன் என்ற குழந்தைகள் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 25 வயது வாலிபர் ஒருவர் திடீரென இன்று காலை 7.40 மணியளவில் பள்ளிக்குள் புகுந்தார். இவர், தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவர், பெற்றோரில் இருவர் மற்றும் 3 குழந்தைகள் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குற்றவாளியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

China

இது உள்நோக்கத்துடன் நடந்த தாக்குதல் என லியான்ஜியாங் கவுன்டி போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது சீனா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் பொதுமக்கள் இதுபோன்று ஆயுதங்களை வைத்திருப்பதற்கு கடுமையாக தடை விதிக்கிறது.

நாடு முழுவதும் சமீப காலங்களாக பள்ளிகளை இலக்காக வைத்து தாக்குதல்கள் நடத்துவது அதிகரித்து உள்ளன. இதனால், பள்ளிகளை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அதிகாரிகள் உள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் ஜியாங்சி மாகாணத்தில் கத்தியுடன் புகுந்த மர்ம நபர் நடத்திய தாக்குதலில், 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.


அதேபோல் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் தெற்கு சீனாவில் உள்ள பள்ளியில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் 37 மாணவர்களும், இரண்டு பெரியவர்களும் காயம் அடைந்தனர். அதே ஆண்டு குவாங்சி பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளியில் கத்திக்குத்து சம்பவத்தால் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர். அதில் 16 பேர் காயமடைந்தனர்.

From around the web