5 குழந்தைகள் கொலை... 16 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு! 

 
Belgium

பெல்ஜியத்தில் தனது 5 குழந்தைகளை கொன்று ஆயுள் தண்டனை பெற்ற பெண் 16 ஆண்டுகளுக்குப் பின் கருணை கொலை மூலம் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் ஜெனிவீ லெர்மிட் (58). இவர், கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அன்று தனது ஒரு மகன் மற்றும் 4 மகள்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அத்துடன் தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் உயிர் பிழைத்த நிலையில், போலீஸை தொடர்பு கொண்டு சரணடைந்தார். 

உயிரிழந்த அவரது 5 குழந்தைகள் 3 முதல் 14 வரையிலான வயதானவர்கள், தான் பெற்ற குழந்தைகளையே இப்படி கொடூரமாக கொலை செய்த ஜெனிவீக்கு ஆயுள் தண்டனை விதித்து பெல்ஜியம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், சிறைவாசத்தில் இருந்த பெண்ணுக்கு தீவிர மன நல பாதிப்பு ஏற்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த அவர் 2019-ல் சிறையில் இருந்து மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

Belgium

இந்நிலையில், தன்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மன நல பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளேன், எனவே கருணை கொலை செய்துவிடுங்கள் என ஜெனிவீ தனது வக்கீல் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். பெல்ஜியம் நாட்டில் ஒரு நபர் தவிர்க்க முடியாத சூழலில் கருணை கொலை செய்து கொள்ள அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.

அதன்படி, ஜெனிவீ விருப்பத்தின் பேரில் தனது குழந்தைகளை கொன்ற பிப்ரவரி 28-ம் தேதி அன்றே சரியாக 16 ஆண்டுகள் கழித்து கருணை கொலை செய்யப்பட்டார். அவருக்கு உரிய வகையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு கருத்துகளை பெற்ற பின்பே கருணை கொலை செய்யப்பட்டதாக வக்கீல் நிக்கோலஸ் கோஹன் கூறியுள்ளார்.

Kurunai murder

உடல் நல மற்றும் மனநல காரணங்களை காட்டி பெல்ஜியம் நாட்டில் கருணை கோரிக்கைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்தாண்டில் மட்டும் 2,966 பேர் கருணைக்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இது 2021-ம் ஆண்டை ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகமாகும்.

From around the web