லாரி மீது 5 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து.. 3 பேர் உடல் நசுங்கி பலி.. அமெரிக்காவில் சோகம்!!

 
Sunnyvale

அமெரிக்காவில் லாரி மீது 5 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரம் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சன்னிவேல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது.

அப்போது லாரிக்கு பின்னால் தொடர்ந்து 5 கார்கள் வந்து கொண்டிருந்தன. நள்ளிரவு நேரம் என்பதால் சாலை வெறிச்சோடி காணப்பட்டதால் அந்த கார்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. இதனால் தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரி மீது முதலில் 4 கார்கள் மோதின.

Sunnyvale

இதனையடுத்து அந்த காரில் இருந்தவர்கள் உடனடியாக அதில் இருந்து இறங்க முற்பட்டனர். ஆனால் பின்னால் வந்த மற்றொரு கார் அவர்கள் மீது மோதியது. இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக ஆடுகள் குழிக்குள் விழுவது போல அடுத்தடுத்து கார்கள் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த சங்கிலித்தொடர் விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், விபத்தில் சிக்கிய வாகனங்களை பல மணி நேரம் போராடி மீட்டெடுத்தனர். 

Sunnyvale

இதன் காரணமாக அந்த நெடுஞ்சாலையின் வடக்கு மற்றும் தெற்கு பாதைகள் மூடப்பட்டு வாகனங்கள் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டன. வாகனங்களை மீட்ட பின்னர் அந்த பாதை மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் சுமார் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதாக கலிபோர்னியா மாகாண போக்குவரத்து துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

From around the web