பெரு அகழாய்வில் 1000 ஆண்டுகள் பழமையான 5 மம்மிகள் கண்பிடிப்பு

 
Peru

பெருவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த 5 மம்மிக்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் குடியிருப்பு பகுதிகளின் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் உலகின் மிகப்பெரும் அகழாய்வில், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிக்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் 4 குழந்தைகள் உட்பட 5 மம்மிக்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

புகழ் பெற்ற இன்காக்கள் பெருவிற்கு வருவதற்கு முன்பான மறுசீரமைப்பு காலத்தில் உருவான கலாச்சாரத்தின் பின்னணியில், மம்மிகள் அடையாளம் காணப்படும் பிராந்தியம் விளங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பண்டைய பெருவியர்களின் கலாச்சார மற்றும் சமூக பின்னணியை ஆராயும் தொல்பொருள் ஆய்வின் அங்கமாக இவை கண்டறியப்பட்டு உள்ளன.

Peru

முன்னதாக கடந்த ஜூன் மாதம் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மி கண்டறியப்பட்டது. இது லிமா பள்ளத்தாக்குகளில் அப்போது வாழ்ந்த மஞ்சாய் கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டது. இவை உட்பட இதற்கு முன்னதான பெரு நாட்டின் அகழாய்வுகளில் சிக்காத பொருட்கள் மற்றும் நீண்ட முடியுடனான மம்மிகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பெரு பிரமிடுகளின் பின்னணியில் புதிய பாதையிலான திறப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஹுவாகா லா புளோரிடா தொல்பொருள் தளத்தில் கண்டறியப்பட்ட குழந்தை மம்மிகள், பெருவின் மத்திய கடற்கரையில் சுமார் 900 முதல் 1450 வரை வசித்த இன்கா நாகரீகத்துக்கு முந்தையவையாக இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். மம்மியாக்கம் செய்யப்பட்ட இந்த குழந்தை மம்மிகளும் நீளமான தலைமுடியுடன், தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் அளித்தன.


பண்டைய கோவிலுடன் வீற்றிருந்த ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் இந்த மம்மிகள் காணப்பட்டன. லிமாவின் ரிமாக் மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளரான லூயிஸ் டகுடா என்பவர், ’இந்த கோவில் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்றும் இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் கோவில் அடிவாரத்தை புனிதமான இடமாகக் கருதியதால், தங்களில் இறந்தவர்களை இங்கு புதைத்திருக்கலாம்’ என்றும் தெரிவித்தார்.

சுமார் 1 கோடி மக்கள்தொகையுடன் விளங்கும், பெருவியன் தலைநகர் லிமாவில் சுமார் 400 தொல்பொருள் இடிபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் மிகப்பெரிய தொல்பொருள் தளங்கள் லிமாவிற்கு வெளியே குஸ்கோவில் அமைந்துள்ளன. இது இன்கா பேரரசின் தலைநகராக இருந்து,16-ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் வெற்றியாளர்களிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web