மனைவி உட்பட 42 பெண்கள் கொடூரமாக கொலை.. குப்பையில் குவியல் குவியலாக உடல்.. கென்யாவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Kenya

கென்யாவில் மனைவி உட்பட 42 பெண்களை கொலை செய்த சைக்கோ கொலையாளியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகர் நைரோபியின் சோவெட்டோ பகுதியில் பயன்பாட்டில் இல்லாத குவாரி ஒன்று அமைந்துள்ளது. புழக்கத்தில் இல்லாத இந்த குவாரி, தற்போது குப்பைக் கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த குப்பைக் கிடங்கையும் சைக்கோ கில்லர் ஒருவர், சவக்குழியாக பயன்படுத்தி வந்துள்ளார்.

கடந்த 11-ம் தேதி வழக்கத்திற்காக மாறாக சோவெட்டோ குப்பைக் கிடங்கில் பிளாஸ்டிக் மூட்டை கிடந்துள்ளன. அவற்றை சோதனை செய்த போலீசார், அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிளாஸ்டிக் பைக்குள் உடல் பாகங்கள் வெட்டப்பட்டு, சிதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இருந்துள்ளது. அதை எடுக்கும்போது அடுத்தடுத்து 9 பிளாஸ்டிக் பைகளில், பெண்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டு போலீசார் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Kenya

9 பெண்களின் உடல்களையும் மீட்கப்பட்ட நிலையில், கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். துப்பு ஏதும் கிடைக்காமல் போலீசார் குழம்பிப் போய் நின்றபோது, கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் செல்போன் கிடைத்துள்ளது.

அதை ஆய்வு செய்ததில் 33 வயதான காலின்ஸ் ஜுமைசி கலூஷா என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. உடல்கள் கண்டெடுக்கப்பட்ட குப்பைக் கிடங்கில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் உள்ள காலின் ஜுமைசி வீட்டை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கிடைத்த பொருட்கள் மூலம், அவர் தான் சீரியல் கில்லர் என்பதை உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. 9 பெண்களை கொலை செய்தது நான் தான் என்று அவர் ஒப்புக்கொண்டார். அடுத்து கொடுத்த வாக்குமூலம் ஒட்டுமொத்த கென்யாவையே குலைநடுக்க வைத்துள்ளது.


கடந்த 2022-ம் ஆண்டு, முதலில் தனது மனைவியை கொலை செய்தாக கூறிய காலின்ஸ் ஜுமைசி, அடுத்தடுத்து பல இளம் பெண்களை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதுவரை, 42 பெண்களை கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்த நிலையில், 9 பேரின் உடல்கள் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பெண்கள் எப்படி கொலை செய்யப்பட்டனர், அவர்களின் உடல்கள் எங்கு உள்ளன என்பது குறித்து மேற்கொண்டு அவர் வாய் திறக்கவில்லை. 

கென்யாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பேசிய, அந்நாட்டு குற்ற புலனாய்வு இயக்குநரக தலைவர் முகமது அமீன், கைது செய்யப்பட்டுள்ள காலின்ஸ் ஜுமைசி, அனைத்து பெண்களையும் ஒரே பாணியில் கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார். உடல் பாகங்களை வெட்டியும், சிதைத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, கொலை செய்யப்பட்ட அனைத்து பெண்களும் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. பெண்களை கொடூரமாக கொலை செய்ததற்கான காரணம் என்ன, பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என, சைக்கோ கில்லர் காலின்ஸ் ஜுமைசியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web