அமெரிக்காவில் 38ஆவது ஆண்டு தமிழ் விழா! ஃபெட்னா ஆயத்தப் பணிகள் தொடங்கியது!!

 
ஃபெட்னா 2025

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 38 ஆவது ஆண்டு விழா  2025ம் ஆண்டு ஜூலை 3, 4, 5ம் தேதிகளில் வட கரோலைனா மாநிலத்தின் ராலே நகரில் நடைபெற உள்ளது.

”தமிழால் இணைவோம் தமிழராய் வாழ்வோம்”  என்ற முழக்கத்துடன் நடைபெற உள்ள இந்த விழாவை ஒருங்கிணைப்பதற்கான துவக்கக் கூட்டம் ஆல்ஸ்டன் ரிட்ஜ் இடைநிலைப் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.கூட்டத்தினை கேரொலைனா தமிழ்ச்சங்க செயற்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் ஆனந்த் செல்வராஜ்  வரவேற்றுப் பேசினார். விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீனா இளஞ்செயன், பாரதி முருகேசன், தொழில்முனைவோர் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்ச்சங்கத் தலைவரும் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினருமான முனைவர் பாரதி பாண்டி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் முதலானோரை அறிமுகப்படுத்தி, பேரவைவிழா குறித்து பேரவைத் தலைவர் விஜய் மணிவேல் விரிவாகப் பேசினார். பேரவைத் துணைத்தலைவர் எழிலன் இராமராஜன் விழா ஏற்பாடுகள், நிதிதிரட்டல் குறித்து விளக்கமளித்தார். 

கூட்டத்தின் சிறப்பு விருந்தின்ர்களாகக் ராலேநகர் மேயர் மற்றும் உள்ளூர்க் காங்கிரசுமேன் சார்பாக பேராளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  தன்னார்வலர்களைப் பாராட்டியும் விழாசிறக்க வாழ்த்தியும் உரையாற்றினர்.

பேரவையின் முன்னாள் தலைவர்கள் முனைவர் தணிகுமார் சேரன், மருத்துவர் சோம.இளங்கோவன் ஆகியோரைத் தொடர்ந்து  தமிழார்வலர்கள் ஏராளமானோர் தத்தம் பங்களிப்புக்கான ஏற்புகளை அறிவித்துக் கொண்டனர். கொடைதிரட்டல் பணிகளை முனைவர் பாரதி பாண்டி கலகலப்புடன் ஊக்கமூட்டி முன்னெடுத்துச் சென்றார். 

சிறப்பு விருந்தின்ர்கள் மற்றும் கலந்து கொண்ட 275க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அனைவருக்கும், பொருளாளர் சண்முகம் பச்சமுத்து  நன்றி தெரிவித்தார். 

2025ம் ஆண்டு தமிழ் விழாவுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. 

 

From around the web