அம்மாவை சுட்டுக்கொன்ற 2 வயது மகன்.. விளையாட்டால் பறிபோன உயிர்.. அமெரிக்காவில் பகீர் சம்பவம்!
அமெரிக்காவில் 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது 2 வயது மகனால் தற்செயலாக சுடப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள நார்வாக் நகரில் வசித்து வந்தவர் லாரா (31). லாராவின் கணவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். சென்ற வாரம், வெள்ளிக்கிழமையன்று, லாராவின் கணவர் பணிக்குச் சென்றிருந்த நேரத்தில், லாரா துணி துவைத்துக் கொண்டிருந்திருக்கிறார்.
தம்பதியர் வீட்டின் படுக்கையறையில் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு இருந்த ஒரு துப்பாக்கியை எப்படியோ லாராவின் மகன் எடுத்துள்ளான். அப்போது தவறுதலாக அவரது மகன் கை பட்டு அந்த துப்பாக்கி வெடித்ததில் லாராவின் முதுகில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து, லாரா அவசர எண்ணான 911 ஐ டயல் செய்து உதவிக்கு அழைத்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த லாரா தனக்கு நடந்ததை விவரமாக கூற, அதை பதிவு செய்துகொண்ட போலீசார் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
அவசர அவசரமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் எடுத்துள்ளார்கள். லாரா, அப்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால், லாராவின் வயிற்றிலிருந்த அந்த ஆண் குழந்தை பிழைக்கவில்லை. சில மணி நேரங்களுக்குப் பின் லாராவும் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், லாரா வீட்டை சோதித்த போலீசார், அங்கு சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்கள். அப்படி இருந்தும் லாராவின் மகன் அந்த துப்பாக்கியை எடுத்தது எப்படி, அவனால் எப்படி துப்பாக்கியின் ட்ரிகரை இழுக்க முடிந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.