இரண்டரை லட்சம் தமிழர்கள் திரண்ட தமிழ்த் திருவிழா !!

 
9 Tamil Festival

கனடா நாட்டின் ட்ரோண்டோ நகரில் 9வது தமிழ்த் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு விருந்தினராக அயலகத் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி வருகை தந்திருந்தார். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் விழாவின் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். கனேடிய, அமெரிக்க அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் அரசாங்க அதிகாரிகளின் வருகை மேலும் சிறப்பு சேர்த்தது.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதியில் கனேடியன் தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ்த் திருவிழா நடைபெற்று வருகிறது. மார்க்கம் ரோட்டில் இரண்டு நாட்களாக நடைபெறும் விழாவில்,  இந்த ஆண்டு பல்வேறு கூடுதல் சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

திருவள்ளுவர் அரங்கம், பாரதியார் அரங்கம், சிவப்பு கம்பள வரவேற்பு அரங்கம் என மூன்று பெரும் அரங்கங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது.  தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகர் விஜய் பிரகாஷ், இங்கிலாந்து பின்னணிப் பாடகி மதுலானி,  இலங்கையிலிருந்து கோகுலன் சாந்தன் மற்றும் கனேடிய கலைஞர்கள் பங்கேற்பில் மாபெரும் இன்னிசை விருந்து இடம் பெற்றது,.

தமிழ்நாட்டின் பறை இசை மன்னன் மணிமாறன் மகிழினி குழுவினரின் பறை இசையுடன் தமிழர்களின் பாரம்பரிய இசை நடன நிகழ்ச்சிகள் விழாவுக்கு மணிமகுடம் சூட்டுவதாக அமைந்தது.

9 Tamil Festival

மேட் இன் முல்லைத் தீவு ஃபேஷன் ஷோ இதயத்தை வருடும் வகையில் அமைந்து இருந்தது, கருப்பு ஜுலை, தமிழர்களின் கனேடிய குடியேற்றம், இலங்கைத் தமிழர்களின் துயரம் என பல்வேறு கருத்தாக்கத்தில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சி பார்வையாளர்களை நெகிழச் செய்தது. போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண்களின் புனர்வாழ்வுக்காக கைத்தறி ஆடைகள் நெய்யும் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இலங்கைப் பெண்களின் கைவண்ணத்தில் உருவான  சேலைகளுக்கு,பெரும் வரவேற்பு கிடைத்தது.

Vijay Prakash

நூற்றுக்கும் மேற்பட்ட உணவு அரங்கங்களில் பன்னாட்டு உணவு வகைகள் விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது. தன்னார்வ அமைப்புகளும் அரங்கங்கள் அமைத்து தங்கள் சேவைகளை மக்களுக்கு எடுத்துரைத்தன.

வண்ணமயமான 9வது தமிழ்த் திருவிழா, தமிழர்களின் பாரம்பரியம்,  கலாச்சாரம், பண்பாடு, ஒற்றுமை மற்றும் எதிர்காலத் திட்டங்களை பறை சாற்றுவதாக அமைந்திருந்தது.  

From around the web