மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் அமெரிக்காவை சுழன்றடித்த ஹெலன் சூறாவளி.. 26 பேர் பலி!
அமெரிக்காவில் 225 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளியால் 26 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை பலவீனமடைந்தது. இதனை தொடர்ந்து, புளோரிடா பகுதியில் சூறாவளி கரையை கடந்தது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
வீடுகள் பல சூறாவளியால் சேதமடைந்தன. இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் மற்றவர்களை பாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர் ஒருவரும் அடங்குவார். புளோரிடாவை சேர்ந்த 7 பேர், தெற்கு கரோலினாவில் 6 பேரும், வடக்கு கரோலினாவில் ஒருவரும் உயிரிழந்தனர். மொத்தத்தில் 26 பேர் உயிரிழந்து உள்ளனர். வடக்கு கரோலினாவில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இவர்களில், பெண் ஒருவர் மற்றும் பிறந்து ஒரு மாதமேயான அவருடைய இரட்டை குழந்தைகள் ஆகியோரும் உயிரிழந்து உள்ளனர். இதேபோன்று, மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்ததில் 89 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்து உள்ளார். விர்ஜீனியா மாகாணத்திலும் சூறாவளி பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் சூறாவளியின் சமீபத்திய பாதிப்புகளை பற்றி விரிவாக விளக்கப்பட்டது என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
புளோரிடா, ஜார்ஜியா மற்றும் கரோலினா பகுதிகளில் மின்சாரம் இன்றி 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. ஹெலன் சூறாவளி வடக்கு நோக்கி நகர்ந்து ஒஹியோ மற்றும் இண்டியானா மாகாணத்திலும் மின்சார விநியோகம் தடைப்பட்டு இருந்தது. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. புளோரிடா விமான நிலையங்கள் மூடப்பட்டன. பாலங்கள் பரிசோதிக்கப்பட்டன.
Video of a house floating away and collapsing in Asheville as tropical storm Helene floods the area. pic.twitter.com/6HORGSg8cX
— ABC11 EyewitnessNews (@ABC11_WTVD) September 27, 2024
அமெரிக்கா மட்டுமின்றி மெக்சிகோவின் சில தெருக்களில் வெள்ளநீர் சூழ்ந்தும், மரங்கள் அடியோடு சாய்ந்தும் காணப்பட்டன. கியூபாவின் மேற்கே 2 லட்சம் வீடுகள் மின் இணைப்பு வசதியின்றி துண்டிக்கப்பட்டு இருந்தன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் இதுபோன்ற சூறாவளிகள் உருவாவதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது. இது சூடான தண்ணீரில் விரைவாக நிகழ்ந்து, சக்தி வாய்ந்த சூறாவளியாக உருமாறி சில சமயங்களில் பல மணிநேரம் வரை அதன் தாக்கம் இருக்கிறது என கூறப்படுகிறது.