பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் பலி... அமெரிக்காவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்து பலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஸ்டார்ட்ஸ் ரைட் ஹியர் பள்ளிக்கு போலீசார் விரைந்தனர்.
அங்கு துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த 3 பேரை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொருவர் அந்த பள்ளியில் வேலை செய்யும் ஊழியராவார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில் இது தொடர்பாக 3 சந்தேகத்துக்குரிய நபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து 2 மைல் தொலைவில் இருந்த காரில் இருந்த இருவரை பிடித்தனர். மற்றொருவர் காரில் இருந்து தப்பிச் சென்றபோது போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
BREAKING UPDATE: Des Moines police say two students are now dead, one staff member still in the hospital.
— Chenue Her (@ChenueHer) January 23, 2023
Three potential suspects are all in custody.
Police say this shooting happened at the Starts Right Here charter school in downtown Des Moines. pic.twitter.com/MRk6GinGno
முன்னதாக கடந்த 21-ம் தேதி கலிபோர்னியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் நடைபெற்ற நிலையில் நேற்று நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.