அமெரிக்காவில் 2 விமானங்கள் நடு வானில் மோதல்.. 6 பேர் பலி!! வைரல் வீடியோ

அமெரிக்காவில் இரண்டாம் உலக போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில் இரண்டாம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற, பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் விண்ணில் பறந்து சென்றன. இந்த இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்து சென்றபோது, நடுவானில் திடீரென மோதி விபத்தில் சிக்கின.
இந்த சம்பவத்தில் நேராக முன்னோக்கி சென்ற போயிங் விமானத்தின் மீது அதன் இடதுபுறத்தில் சென்று சிறிய விமானம் மோதி உள்ளது. இரண்டு விமானங்களும் விபத்தில் துண்டுகளாக உடைந்து சிதறின. தொடர்ந்து தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்வையாளர்களாக இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து உள்ளனர். பலர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இரண்டும் போர் விமானங்கள் வகையை சேர்ந்தவை. இதில், போயிங் விமானம், ஜெர்மனிக்கு எதிராக இரண்டாம் உலக போரில் வெற்றி பெற முக்கிய பங்காற்றிய, 4 என்ஜின்கள் கொண்ட, குண்டு மழை பொழியும் விமான வகையாகும். இவற்றில் மற்றொரு சிறிய விமானமும், போர் விமானம் ஆகும். இரண்டாம் உலக போரின்போது, தயாரிக்கப்பட்ட இந்த விமானம் சோவியத் விமான படையால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விமான சாகச நிகழ்ச்சியில் 40-க்கும் கூடுதலான, 2-ம் உலக போர் காலத்து விமானங்கள் பங்கேற்றன.
இதுகுறித்து விமான படையை சேர்ந்த பெண் செய்தி தொடர்பாளர் லீ பிளாக், ஏ.பி.சி. செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், போயிங் ரக விமானத்தில் 5 பேர் மற்றும் சிறிய விமானத்தில் ஒருவர் என மொத்தம் 6 பேர் பயணித்து உள்ளனர் என நம்பப்படுகிறது என கூறியுள்ளார். இதனால், இந்த 2-ம் உலக போர் விமானங்களின் வான்சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
Mid air collision at Dallas air show today… 😔
— Flight Emergency (@FlightEmergency) November 12, 2022
pic.twitter.com/3jBY456A26
விமான விபத்து வீடியோக்கள் மனது நொறுங்கும் வகையில் உள்ளன. நமது குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவும், அதுபற்றிய கல்வியறிவை புகட்டுவதற்காகவும் விண்ணுக்கு பறந்து சென்றவர்களின் ஆன்மாவுக்காக வேண்டி கொள்ளுங்கள் என மேயர் ஜான்சன் தெரிவித்து உள்ளார்.