வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி! இருவர் கவலைகிடம்

 
WashingtonDC

அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று மாலை லேபாயேட் சதுக்கம் அருகே திடீரென மின்னல் தாக்கியதில் இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஜேம்ஸ் முல்லர் (76), மற்றும் டோனா முல்லர் (75) ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

WashingtonDC

இந்த விபத்து இரவு 7 மணியளவில் நடைபெற்றது. சதுக்கத்தில் அமைந்துள்ள ஜாக்சன் சிலையின் அருகே அவர்கள் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று மின்னல் தாக்கியதால் அவர்கள் படுக்காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அப்பகுதியில் இடி, மின்னல் ஏற்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து தேசிய மின்னல் அமைப்பு ஆராய்ச்சி குழுவின் நிபுணர் கிரிஸ் வேகாஸ்கி கூறுகையில், வெள்ளை மாளிகை அருகே விபத்து ஏற்பட்ட பகுதியில் 6 ஸ்ட்ரோக் மின்னல் தாக்கியுள்ளது. அதாவது அதீத மின்சாரம் ஒரே புள்ளியில் பயங்கரமாக தாக்கியுள்ளது. அதுவும் அரை வினாடி பொழுதில் இது நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறினார்.

WashingtonDC

அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக மின்னல் தாக்கி உயிரிழப்போர் 21 பேர் என ஆய்வு அறிக்கை சொல்கிறது. அதன்படி இந்த ஆண்டு மட்டும் மின்னல் தாக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலையால் ஏற்படும் இந்த விபத்து தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. அத்தகைய தருணத்தில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

From around the web