நேருக்கு நேர் மோதிக் கொண்ட 2 பேருந்துகள்... கோர விபத்தில் 40 பேர் பலி! செனகலில் சோகம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 40 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலின் கப்ரினி என்ற நகரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை அருகே உள்ள நகர மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த கோர விபத்தில் இதுவரை 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்படடோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை 3 நாள் தேசிய துக்கமாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
விபத்து குறித்து அதிபர் மெக்கே சால் கூறுகையில், இந்த கோர விபத்தில் பல இளம் உயிர்களை நாம் இழந்து விட்டோம். நாளை பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தவுள்ளோம். அதில் நாட்டின் போக்குவரத்து செயல்பாடுகளை மேம்படுத்தவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
ஒரு பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பேருந்தில் மோதியதே விபத்திற்கு காரணம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கிய பலர் படுகாயங்களுடன் கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அந்நாட்டில் உள்ள மோசமான சாலைகள், பாதுகாப்பு குறைவான பொது போக்குவரத்து வாகனங்களே இது போன்ற தொடர் விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.