விண்ணில் மாசு குறைப்பு - 1.9 பில்லியன் காலன்கள் எரிபொருள் சேமிப்பு! அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பெருமிதம்!!

 
American Airlines

உலகம் முழுவதும் விமான சேவை என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்ட நிலையில், விமானங்கள் மூலம் விண்ணில் மாசு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் சூழியல் ஆர்வலர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். விமான நிறுவனங்கள் எரிபொருள் சேமிப்பு செய்ய வேண்டும், அதன் மூலம் விண்ணில் ஏற்படும் மாசு அளவை குறைக்க முடியும் என்று சூழியல் அமைப்புகள் வலியுறுத்து வருகின்றன.

இந்நிலையில் புதிய விமானங்கள் மற்றும் பல்வேறு சீரமைப்புகள் மூலம் 1.9  பில்லியன் காலன்கள் விமான எரிபொருள் சேமித்துள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் முதல் மூன்று பெரிய விமான சேவை நிறுவனங்களில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முக்கியமானதாகும். 

கடந்த 2013ம் ஆண்டு தொடங்கி 670 பழைய விமானங்களை சேவையிலிருந்து நீக்கியும், 600 புதிய விமானங்களை சேவைக்கு அறிமுகப்படுத்தியும் உள்ளது அமெரிக்கன் ஏர்லைன்ஸ். 24 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் இந்த புதிய விமானங்கள் மற்றும் சீரமைப்புப் பணிகளை செய்துள்ளனர். விமானத்தின் உள்ளே குறைவான எடையுள்ள இருக்கைகளாக மாற்றுதல், குறைவான எடையுள்ள பெயிண்ட் களை உபயோகித்தல்,  இருக்கையின் முன்புறம் இருந்த பொழுது போக்கு வீடியோ சாதனத்தை நீக்கி மாற்றாகபயணிகளின் சொந்த  போன், ஐபேட், லேப்டாப் பயன்படுத்துதல் , அச்சிடப்பட்ட இதழ்களைத் தவிர்த்தல்  என பல முற்போக்கான திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

புதிய விமானங்கள் மற்றும் மேற்கண்ட சீரமைப்புப் பணிகள் மூலம் 1.9 பில்லியன் காலன்கள் விமான எரிபொருள் சேமித்துள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பெருமிதத்துடன் தங்கள் வாடிக்கையாளர்களிடம் பகிர்ந்துள்ளனர்.

From around the web