நேபாளத்தில் விமானம் விழுந்த விபத்தில் 18 பேர் பலி.. அதிர்ச்சி வீடியோ!
நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 18 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து பொக்காரா என்ற ரிசார்ட் நகருக்கு இன்று காலை 11 மணியளவில் சவுர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்பியபோது (டேக்ஆப்) திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில் விழுந்து நொறுங்கியது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது.
உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் விமானம் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. விமானத்தில் இருந்த 19 பேரில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பைலட், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்து தொடர்பான பதைபதைக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Tragic plane crash in #Nepal!
— Dipankar Kumar Das (@titu_dipankar) July 24, 2024
Saurya Airlines aircraft crashes during takeoff in Tribhuvan International Airport, Kathmandu. 19 people were aboard the Pokhara-bound plane.#PlaneCrash pic.twitter.com/Xsqhtvkpne
விமானத்தில் பயணித்த அனைவரும் விமான நிறுவன ஊழியர்கள் என காவல் துறை தெரிவித்துள்ளது. விமான நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர்களை மட்டுமே ஏற்றிச் சென்றதாக ஹிமாலயன் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.