பெறுக்கெடுத்த வெள்ளத்தில் இந்தியர் உள்பட 17 பேர் பலி.. தத்தளிக்கும் ஓமன் நாடு.. மக்களை அலெர்ட் செய்த அரசு!
ஓமனில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இந்தியர் ஒருவர் உட்பட 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு ஆசியாவில் உள்ள நாடான ஓமனில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புகள், வீடுகள் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. கார்கள், பைக்குகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
பொதுமக்கள் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர் என அந்நாட்டின் அவசரகால மேலாண்மைக்கான தேசிய கமிட்டி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இதில், முசாண்டம், அல் புரைமி, அல் தஹிரா மற்றும் அல் தகிலியா உள்ளிட்ட 5 மாகாணங்களில் பணியாற்றி வரும் தனியார் மற்றும் பொது துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பணிகளை மேற்கொள்ள அரசு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
எனினும், ஓமனில் மஸ்கட் உள்ளிட்ட 6 மாகாணங்களில் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியானது. ஓமனின் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சில நாட்களுக்கு ஓமனின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மித முதல் கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.