ஆசிரியையை கண்ணில் கத்தியால் குத்திய 14 வயது மாணவன்.. ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்!
ஸ்பெயினில் 14 வயது மாணவன் ஒருவன், வகுப்பறையில் தன் ஆசிரியை மற்றும் சக மாணவர்களை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஸ்பெயினின் ஜெரெஸ் டி லா ஃபிரான்டெரா நகரில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் காலைவேளையில் வகுப்புகள் தொடங்கும்போது 14 வயது மாணவர் ஒருவர் கையில் கத்தியுடன் வகுப்பறையில் நுழைந்துள்ளார். கண்ணில் பட்டவரை எல்லாம் அவர் கத்தியால் குத்தத் தொடங்கியுள்ளார்.
ஆசிரியர்கள் அவரை தடுக்க முயன்றபோது, அந்த மாணவர் ஆசிரியை ஒருவரின் கண்ணில் கத்தியால் குத்தியுள்ளார். அத்துடன் மேலும் இரு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களையும் அவர் தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த மாணவரை கைது செய்தனர். காயமடைந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கண்ணில் கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு வந்த பிற மாணவர்களின் பெற்றோர்கள், இச்சம்பவம் குறித்து அறிந்து பீதியடைந்தனர்.
Teenager stabs three teachers and two students at a school in southern Spain pic.twitter.com/d32GpPL3y2
— TRT World Now (@TRTWorldNow) September 28, 2023
அவர்கள் பள்ளி வாசலில் நின்றுகொண்டு, தங்கள் குழந்தைகள் காயமின்றி வெளிவருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். தாக்குதல் நடத்திய மாணவர் தற்போது ஜெரெஸ் போலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்ந சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.