ஹார்ட் டிஸ்கில் 13,000 நிர்வாண வீடியோக்கள்.. அமெரிக்காவில் கைதான இந்திய மருத்துவர்.. பகீர் குற்றப் பின்னணி!
அமெரிக்காவில் இந்திய மருத்துவர் ஒருவர் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்களை நிர்வாணமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் ஓக்லாண்ட் கவுன்ட்டியில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் உமர் ஏஜாஸ் (40). இந்திய குடிமகனான இவர், 2011-ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர்மீது பாலியல் தொல்லை ரீதியான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில், காவல்துறை விசாரணையை தொடங்கியது. அதில்தான் பல அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ஏஜாஸ், நீச்சல் குளத்தில் உடை மாற்றும் அறைகள், குளியலறைகள், மருத்துவமனை அறைகள், அலமாரிகள், படுக்கையறைகள், அவரால் இலகுவாக அணுகக்கூடிய குடியிருப்புகளுக்குள் உள்ள குளியலறைகள் ஆகிய பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்களை பொருத்தியிருக்கிறார். அதன் மூலம் 2 வயது சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரின் நிர்வணப் புகைப்படங்களையும் சேகரித்திருக்கிறார்.
இது தொடர்பாக விசாரணைய தீவிரப்படுத்திய காவல்துறை, இவர்மீது குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது, மருத்துவமனையில் நோயாளி ஒருவரிடம் அத்துமீறியது, நிர்வாணப் படங்களை சேகரித்து வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிந்து, அவரைக் கைது செய்திருக்கிறது. ஆறு கம்ப்யூட்டர்கள், நான்கு செல்போன்கள், 15 ஹார்டு டிரைவ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
ஒரு ஹார்ட் டிரைவில் மட்டும் 13,000 வீடியோக்கள் இருந்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தச் சாதனங்களில் உள்ள அனைத்தையும், சாத்தியமான கிளவுட் சேமிப்பகத்தையும் ஆய்வாளர்கள் பரிசோதனை செய்துவருகின்றனர். மேலும், இந்த வீடியோக்கள் மற்றவர்களுக்கும் பரப்பப்பட்டதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மருத்துவரின் இந்தக் குற்றச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.