அமெரிக்க பாராளுமன்றம் வந்தார் எலன் மஸ்க்! திட்டம் என்ன?
அமெரிக்காவின் பெரும் பணக்காரரான எக்ஸ் தளத்தின் உரிமையாளர், டெஸ்லா மின்சார கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவத்தின் நிறுவனருமான எலன் மஸ்க் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார்.அங்கு குடியரசுக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அவை உறுப்பினராகவோ, செனட் உறுப்பினராகவோ இல்லாத எலன் மஸ்க் - ஐ அரசுத் திறன் மேம்பாட்டுத் துறை யின் தலைவர்களில் ஒருவராக புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். அவருடன் அமெரிக்கத் தமிழரான விவேக் ராமசாமியும் மற்றொரு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பொறுப்பிற்கான நியமனத்திற்குப் பிறகு முதன் முறையாக அமெரிக்க நாடாளுமன்றம் வந்த எலன் மஸ்க், அங்குள்ள குடியரசுக் கட்சித் தலைவர்களை சந்தித்து, அரசுத் திட்டங்களின் செலவுகளை எப்படிக் குறைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். எலன் மஸ்க் முன்மொழியும் செலவுக் கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகே அதிபர் கையெழுத்திட்டு சட்டமாக்க முடியும். சில செலவீனங்களுக்கு அதிபரே தனது அதிகாரத்திற்கு உட்பட்டு ஆணை பிறப்பிக்க முடியும்.
தற்போது அமெரிக்க ஒன்றிய அரசின் ஆண்டு செலவுத் தொகை சுமார் 6.8 ட்ரில்லியன் டாலராக உள்ளது. இதில் 2 ட்ரில்லியன் டாலர்களுக்கான செலவீனங்களைக் குறைப்பதற்கு எலன் மஸ்க் இலக்கு நிர்ணயித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.