கஞ்சா போதையில் இளைஞரை பைக் ஏற்றிக் கொன்ற கும்பல்.. கிருஷ்ணகிரியில் பயங்கரம்!

 
Krishnagiri

கிருஷ்ணகிரி அருகே மது போதையில் இருந்த இளைஞர்களை பிடிக்க முயன்ற வாலிபர் இருசக்கர வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னகழனி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது வீட்டின் அருகே நேற்றிரவு 2 இருசக்கர வாகனங்களில் 5-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கஞ்சா புகைத்துக்கொண்டும், மது அருந்திக்கொண்டும் நின்றுள்ளனர். இதனைக்கண்ட சின்னதம்பி, அவர்களிடம் இங்கு நிற்க வேண்டாம், அதிகளவில் ஆடு, மாடுகள் மாயமாகிறது எனக் கூறியுள்ளார்.

அப்போது அங்கு வந்த சின்னதம்பியின் மகன் வெற்றி என்பவரும் இதுகுறித்து கேட்டுள்ளார். எனவே இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கும்பல் அங்கிருந்து கிளம்பியுள்ளது. ஆனால் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் உருட்டுக்கட்டைகளுடன் மீண்டும் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அதே கும்பல், சின்னதம்பி வீட்டில் சண்டை போட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

murder

இதனால் வெற்றி, தனது நண்பரான கார்த்திக் என்பவரை அழைத்து, தங்களை தாக்கிவிட்டு வரும் கும்பலை பிடிக்குமாறு கூறியுள்ளார். இதனால் தனது இருசக்கர வாகனத்தில் கார்த்திக் அவர்களை பிடிக்க கிளம்பியுள்ளார். கார்த்திக் கிளம்புவதைக் கண்ட அவரது தந்தை தேவராஜும் அவர் பின்னால் சென்றுள்ளார். அப்போது அதிவேகத்தில் வந்த கும்பல், கார்த்திக்கின் இருசக்கர வாகனத்தில் படுபயங்கரமாக மோதியுள்ளனர்.

இதில் பைக்கில் இருந்து தூக்கிவீசப்பட்டு கீழே விழுந்த கார்த்திக் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னால் வந்த தேவராஜ், கார்த்திக்கிற்கு உதவ முயன்ற போது, அந்த கும்பல் அவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளது. இதில் தேவராஜ் தலையில் அடிபட்டு மயங்கினார். இதனிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கி திரண்டதால், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது.

Krishnagiri Taluk PS

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தேவராஜின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. உயிரிழந்த கார்த்திக் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்துள்ளார்.

கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கஞ்சா போதையில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சிவா, அருண், கணேஷ், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

From around the web