இளைஞர் மயங்கி விழுந்து பரிதாப பலி.. வெள்ளியங்கிரி மலை ஏறிய போது சோகம்!

 
Kovai Kovai

வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு சென்ற இளைஞர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த அடிவாரத்தில் இருந்து 7 மலைகள் ஏறி சென்றால், அங்கு காட்சியளிக்கும் சுயம்பு வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்கலாம். இதற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

dead-body

இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லிங்கரெட்டி வீதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (22). பி.எஸ்சி பட்டதாரியான இவர், தனது நண்பர்கள் 10 பேருடன், கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு வர திட்டமிட்டு உள்ளார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு கோவைக்கு வந்த அவர்கள், அடிவாரத்தில் இருந்து மலையேற தொடங்கினர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் 6-வது மலையில் ஏறிக்கொண்டு இருந்தனர். அப்போது தமிழ்ச்செல்வனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரை பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

Alandurai PS

இதையடுத்து கோவில் அடிவாரத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அதிக குளிர் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web