இளம் கானா பாடகர் பரிதாப பலி.. போதை ஊசியால் வந்த விபரீதம்!

 
Chennai

ஓட்டேரியில் போதை ஊசி பயன்படுத்திய கானா பாடகர் இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி அடுத்து உள்ள என்.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் நாத். 11-ம் வகுப்பு வரை படித்த இவர், மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த வேலைக்கும் அவர் சரியாக செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்திருக்கிறார். தீபக் நாத்துக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்களை பயன்படுத்தும் பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

drugs

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் தீபக் நாத், தன்னுடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து தனக்கு உடல் நலம் சரியில்லை உடனடியாக ஓட்டேரி பின்னி மைதானத்துக்கு வரும்படி கூறியிருக்கிறார். அதனால் தீபக் நாத்தின் நண்பர் அங்குச் சென்று பார்த்தபோது தீபக் நாத் மயங்கியநிலையில் கிடந்தார்.

உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீபக் நாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதனால் தீபக் நாத்தின் குடும்பத்தினரும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Otteri PS

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், தீபக் நாத்தின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தீபக்நாத் மயங்கி கிடந்த இடத்திற்கு சென்று போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு சில மருந்துகள், ஊசிகள் கிடந்தன. அதனால் போதை ஊசியை போட்டதால் தீபத் நாத் உயிரிழந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே தீபக் நாத் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவத்துள்ளனர்.

From around the web