தமிழ்நாட்டிற்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’.. சென்னை வானிலை மையம் அலெர்ட்!
வருகிற 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் தமிழ்நாட்டிற்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
தென்தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வடதமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசான மழை காணப்படுகிறது. அதேபோல, மாநிலத்தில் நேற்றும் ஓரிரு இடங்களில் மழை காணப்பட்டது.
இந்த சூழலில், தென்தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வருகிற 7-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், நவம்பர் 8-ம் தேதி 9 தமிழ்நாடு கடலோர மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுகை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 9 தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் 6.5 செ.மீ. முதல் 12 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது