தவறான சிகிச்சை.. தொழிலாளியின் மண்ணீரலை அகற்றிய மருத்துவர்கள்.. உறவினர்கள் போராட்டம்!

 
Sriperumbudur

திருவள்ளூர் அருகே தவறான சிகிச்சையால் தொழிலாளியின் மண்ணீரலை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (48). கூலித்தொழிலாளியான இவருக்கு, கடந்த சில மாதங்களாக வயிற்று வலி அதிகமாக இருந்தது. இதையடுத்து அவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது இரைப்பையில் கட்டி இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நாகராஜ், கடந்த 7-ம் தேதி அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையின் போது, மருத்துவர்களின் கவன குறைவாலும், தவறான சிகிச்சையாலும் அருகில்  இருந்த  மண்ணீரலை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் நாகராஜிக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னரும் அதிகமான ரத்த போக்கு இருந்ததாக தெரிகிறது. 

Spleen

இதனால் உடல்நிலை மோசம் அடைந்ததால் மருத்துவர்கள் தாங்களாகவே நாகராஜிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து மண்ணீரலை அகற்றி உள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் மருத்துவமனையில் இருந்த நாகராஜனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் யாரிடமும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஆபரேசன் முடிந்தும் நாகராஜின் உடல் நிலை மோசம் அடைந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் விசாரித்தபோதுதான் இறப்பை கட்டி ஆபரேசனின் போது தவறான சிகிச்சையால் மண்ணீரல் அகற்றப்பட்டு இருப்பது தெரிந்தது. 

OPeration

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜனின் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் உரிய பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நாகராஜின் உறவினர்கள் மருத்துவமனை உள்ளேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மருத்துவமனை டாக்டர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து நாகராஜின் உறவினரான திருவள்ளூரை சேர்ந்த மாறன் என்பவர் கூறும்போது, நாகராஜ் கூலி வேலை செய்து வந்தார். அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு இங்கு வந்தபோது இரைப்பையில் கட்டி உள்ளது என்று கூறி அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது தவறான சிகிச்சை செய்து மண்ணீரலை அகற்றி உள்ளனர். இது குறித்து உறவினர்யாரிடமும் டாக்டர்கள் தெரிவிக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

From around the web