போலீஸ் வேலைக்கு எழுத்து தேர்வு.. 41 திருநங்கைகள் உள்பட 2.5 லட்சம் பேர் எழுதினர்

 
TNUS

தமிழ்நாடு முழுவதும் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான 2-ம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான 2-ம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறையில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட 3,359 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிட்டது.

TNUSRB

இதில், 783 பெண்களும், 2,576 இளைஞர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்த பணியிடங்களில் 2,599 காலி பணி இடங்கள் காவல்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், 780 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைத் துறையில் மொத்தம் 86 காலி பணியிடங்களும், தீயணைப்புத்துறைக்கு 674 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட 2,599 பணியிடங்களில் தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 1,819 பேரும், மாநகர மற்றும் மாவட்ட ஆயுதப்படைக்கு 780 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த அறிவிப்பையடுத்து 2 லட்சத்து 81 ஆயிரத்து 456 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கான எழுத்து தேர்வும், தமிழ் தகுதி தேர்வும் நேற்று தமிழ்நாடு முழுவதும் 35 மாவட்டங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. சென்னையில் 10 மையங்களில் நேற்று இந்த தேர்வு நடத்தப்பட்டது.

TNUSRB

சென்னையில் தேர்வு நடைபெற்ற 10 மையங்களிலும் போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்று நடந்த எழுத்து தேர்வை 41 திருநங்கைகள் உள்பட சுமார் 2.5 லட்சம் பேர் எழுதினார்கள். சென்னையில் மட்டும் 12 ஆயிரம் பேர் எழுத்து தேர்வில் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

From around the web