ஆவின் பாலில் மிதந்த புழு.. ஷாக் ஆன வாடிக்கையாளர்.. மறுப்பு தெரிவித்த ஆவின்!

 
Aavin

கோவில்பட்டி அருகே ஆவின் பாலில் புழுக்கள் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட கங்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி. இவர் கடந்த 15 ஆண்டுகளாக ஆவின் பால் பாக்கெட் வாங்கி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Aavin

இந்நிலையில், பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக வெளியான தகவலுக்கு ஆவின் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவின் நிறுவனம் பொது மக்களின் தேவைக்கேற்ப பால் மற்றும் பால் உபபொருட்களை அன்றாடம் விற்பனை செய்து வருகிறது. 21.2.2024 மற்றும் 22.2.2024 அன்று ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் கோவில்பட்டி பகுதி மணியாச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கங்கன்குளம் கிராமத்தில் ஆவின் டிலைட் பால் பாக்கெட் வாங்கிய நுகர்வோர் ஒருவர் ஆவின் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் மற்றும் துணைப்பதிவாளர் (பால்பதம்) அவர்களும் புகார் அளித்த கிராமத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்தவரை நேரில் சந்தித்து விசாரித்ததில் அவரிடம் புகார் அளித்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என கண்டறியப்பட்டது. மேலும், அவரிடம் இருந்த பால் பாக்கெட்டைப் பெற்று அவர் முன்னிலையில் ஆய்வு செய்த பொழுது அதில் எந்த ஒரு குறையும் இல்லை என்பதையும், பாலின் தரமும் நன்றாக இருந்தது அறியப்பட்டது.

அந்தப் பாலை விநியோகம் செய்த மொத்த விற்பனையாளரிடம் விசாரனை மேற்கொண்ட போது வேறு எந்த வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வித புகாரும் பெறப்படவில்லை எனத் தெரியவந்தது. எனவே ஆவின் பால் பாக்கெட் சம்பந்தமாக அளிக்கப்பட்ட புகாருக்கு எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதையும் மற்றும் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

From around the web