உலக பட்டினி தினம்.. 234 தொகுதிகளுக்கும் தலைவர் விஜய் உத்தரவு

 
Vijay

உலக பட்டினி தினத்தை ஒட்டி ஒரு வேளை உணவு சேவை என்ற திட்டத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தினர், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

உலக பட்டினி தினம் இன்று (மே 28) அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. ஒருவர் கூட பசி பட்டினியால் வாட கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தியும், ஒவ்வொரு ஆண்டும் மே 28-ம் தேதி உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கை நேற்று முன்தினம் (மே 26) வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகப் பட்டினி தினமான மே 28-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

TVK

மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றிப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின், ஏழை எளியோருக்கு உணவிட்டு வருகின்றனர். அதில், ஒரு பகுதியாக, கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள உழவர் சந்தை பகுதியில், தமிழக வெற்றி கழகம், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணியினர், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள், பொதுமக்களுக்கு, அன்னதானம் வழங்கினர்.

TVK

இந்த அன்னதானத்தை தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், காய்கறி வியாபாரிகள், ஓட்டுனர்கள் என ஏராளமானோர் பெற்று சென்றனர். இதே போல கோவை, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போத்தனூர், வெள்ளலூர், ஏலூர், மதுக்கரை மார்க்கெட், பொள்ளாச்சி, கிணத்துகடவு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினரும் உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web