பெண்கள் பாதுகாப்பு! எடப்பாடி பழனிசாமியின் நூதனத் திட்டம்?
திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே கிட் வழங்கியுள்ளார்.
சென்னை அண்ணா திமுக தலைமை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர்கள் புடைசூழ வந்த எடப்பாடி பழனிசாமி, பெப்பர் ஸ்ப்ரே (மிளகுத்தூள் தூவும் டப்பா) மற்றும் அவசர உதவிக்கு ஒலி எழுப்பும் ஒலி எழுப்பான்(எமெர்ஜென்சி அலாரம்) அடங்கிய பெட்டியை வழங்கினார். தங்களுக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் எமெர்ஜென்சி அலாரத்தின் பொத்தானை அமுக்கு ஒலி எழுப்பவும் அல்லது கையில் உள்ள பெப்பர் ஸ்ப்ரே கொண்டு எதிராளியின் கண்களில் தூவ வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமி பெண்கள் பாதுகாப்புக்கு தரும் ஆலோசனை ஆகும்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் எஃப் ஐ ஆர் வெளியாகி பரப்பரப்பு ஏற்பட்டது. சம்மந்தப்பட்ட குற்றவாளியை சில மணி நேரங்களிலேயே கைது செய்து ஒரு நாளுக்குள் எஃப் ஐ ஆர் போட்டு விட்டோம் என்று முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் 12 நாட்களுக்குப் பிறகே அதிமுக ஆட்சியில் எஃப் ஐ ஆர் போடப்பட்டது என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக வட்டச் செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்பதுவும் குறிப்பிடத் தக்கது.